வால்ட் டிஸ்னி வரலாறு 


How Walt Disney came to be and the history of Mickey Mouse

நம் உலகில் தனது குறும்பு தனத்தால் அதிகமானோரை சிரிக்க வைத்தது யார் என்றால் அதிகமானோர் கூறும் பதில் சார்லி சாப்ளின் தான். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிர் இல்லாத ஒன்று உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் அது தான் மிக்கி மவுஸ் (Mickey Mouse). 

இதை தெரியாத குழந்தைகள் இருக்க முடியாது. பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் தான் வால்ட் டிஸ்னி (Walt Disney). இவர் 1901-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் அமெரிக்காவின் Illinois மாநிலத்தில் பிறந்தார். அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், வண்ணங்கள் தீட்டுவதிலும் ஆர்வம் இருந்து இருக்கிறது. 

ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பனையும் செய்து வந்துள்ளார். அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை யென்றாலும், வால்ட் டிஸ்னிக்கு தாயார் ஊக்கமூட்டி உள்ளார். அதனால் அவர் தொடர்ந்து இந்த வேலையை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிக்காக்கோவின் மெக்கின்லி ( McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. 

How Walt Disney came to be and the history of Mickey Mouse



ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். 1922-ஆம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் Roy-யுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் வால்ட் டிஸ்னி. மேலும் இவர் கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார். 

ஆனால் அது தோல்வியைத் தழுவியது. நிறுவனமும் அழிந்து போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றி உள்ளார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. 

அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறி ஆச்சர்யமடைய செய்தார். அந்த அதிசய எலிதான் 'Mickey Mouse'. முகம் இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது தான் Mickey Mouse. பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது. வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். 

How Walt Disney came to be and the history of Mickey Mouse



அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி மௌவுஸ் அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'Donald Duck' என்ற வாத்து. 

1937-ஆம் ஆண்டில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. அதன் பின்னர் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை அவர் உருவாக்கினார். திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955-ஆம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Oakland நகரில் உருவாக்கினார். 

How Walt Disney came to be and the history of Mickey Mouse



 டிஸ்னி சிறுவனாக இருந்த வயதில் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியாமல் இருந்துள்ளது. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்தது. அதன் பிறகு வால்ட் டிஸ்னி நோய்வாய்ப்பட்டு 1966-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் தமது 65-ஆவது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள்கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ராய்.

Post a Comment

Previous Post Next Post