கொய்யாப் பழத்தின் வகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகமாகவும் வைட்டமின் - பி குறைவாகவும் இருக்கிறது. உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் ஒரு பழுத்த வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் பசி அதிகமாக எடுக்கும்.
கொய்யாப்பழத்தை அளவாகச் சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்றுப் புண், இதயவலி, புற்றுநோய், பல் சம்பந்தமான நோய்கள், மலச்சிக்கல், உடலில் ஏற்படும் சொறிசிரங்கு, புண்கள் போன்றவை மிக விரைவாகக் குணமாகும்.
கொய்யாப்பழத்திலுள்ள துவர்ப்பு சுவை இரத்தத்தை விருத்தி செய்யும். துவர்ப்புச் சுவை குறைந்தால் உடல் வெளுக்கும். காமாலை நோய் வரும். ஆகையால் கொய்யாவைக் காயாகச் சாப்பிடுவதே நல்லது.

இனிப்பான கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் தசைகள் வளர்ச்சி பெறும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். உடல் உறுதியாகவும் கட்டாகவும் இருக்கும். மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்களும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் கட்டுப்பட்டு விரைவில் குணமாகும்.
கொய்யாப்பழத்துடன் சிறிது உப்பையும் சேர்த்துச் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். மலச்சிக்கல் நீங்கும். பொதுவாக கொய்யாப்பழத்திற்கு பற்களும் ஈறுகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் சக்தி உண்டு. குழந்தைகளிடம் ஜீரண சக்தியையும் அதிகப்படுத்துகிறது.
தாவர, உணவுகளுள் லைகோபென் என்ற சத்து அதிகமாகவும், 100 கிராம் கொய்யாப்பழத்தில் 688 மில்லிகிராம் பொட்டாசியமும், ஒரு கப் பழத்துண்டுகளில் 9 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. ஆண்களின் பிராஸ்டேட் சுரப்பியின் ஆரோக்யத்திற்கு இன்றியமையாத தாவர உணவு கொய்யாதான். 63% பொட்டாசியம் சத்தும், நார்ச்சத்தும், அதிகம் உள்ள முதல் தாவர உணவும் இதுதான். காயாகவும், பழமாகவும் அளவுடனும் தவறாமல் சாப்பிட வேண்டிய பழம் கொய்யா. இரத்தக்கொதிப்பும் தடுக்கப்படும். தக்காளியில் உள்ளதைவிட லைகோபென் அதிகம் இருப்பதால் பெண்களும் கொய்யா சீசனில் நன்கு சாப்பிடலாம். வீரிய விருத்தியை உண்டாக்கும் இயல்பு கொய்யாப் பழத்துக்கு உண்டு.

இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, இரத்தத்தின் வளத்தைப் பெருக்குவதில் இதன் சக்தி பயன்படுகிறது. இதனால் இரத்தசோகை பிடித்தவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழம் சாப்பிட குணம் தெரியும்.
கொய்யாப் பழம் பித்தக் கோளாறுகளை ஊட்டக் கூடியதாகையால் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. இருதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆதலால் இருதய நோயாளிகள் கொய்யாப்பழ சீசனில் அன்றாடம் ஒரு பழத்தை காலை உணவுக்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

மாம்பழத்தை அடுத்து மார்க்கெட்டில் அதிக அளவு விற்பனைக்கு வரக்கூடிய பழம் கொய்யாப் பழமாகும்.

கொய்யாப்பழம் பந்து போன்று உருண்டு திரண்டிருக்கும் 200 கிராம் முதல் 15 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். பொதுவாக இதன் நிறம் மஞ்சளாகவே இருக்கும், சில வகையான கொய்யாப்பழம் பம்பரம் போன்ற வடிவத்திலுமிருக்கும். கொய்யாப்பழத்தில் பலவகை உண்டு. கொய்யாப்பழத்தின் மேல் பகுதி மஞ்சள் நிறமாக இருந்தாலும் சிலவகைப் பழங்களின் உள் பகுதி வெண்ணிறமாகவும், சில வகைப் பழங்களின் உள்பகுதி ரோஜாப் பூ நிறத்திலுமிருக்கும். கொய்யாப்பழத்தின் நடுப் பாகத்திலுள்ள சதைப் பகுதியில் ஏவரிசியின் வடிவத்தில் வெண்ணிறமான சிறு விதைகள் நிறைந்திருக்கும். இந்த விதையுடன் தான் சாப்பிட வேண்டும். இந்த விதைகளை மென்று தின்றால் நல்ல ருசியாக இருக்கும்.
இந்தப் பழத்திலிருந்து ஒருவகை நறுமணம் வெளியேறிக் கொண்டேயிருக்கும். கொய்யாப்பழம் உள்ள இடத்தில் இந்த வாசனையும் இருக்கும். கொய்யாப்பழம் இனிப்புடன் துவர்ப்பு கலந்த ருசியாக இருக்கும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து சிறிதளவும் கிடையாது. வைட்டமின் சி உயிர்ச்சத்துதான் அதிக அளவில் இருக்கிறது. வேறு எந்தப் பழத்திலுமில் லாத அளவு வைட்டமின் சி உயிர்ச்சத்து கொய்யாப் பழம் ஒன்றில் தான் இருக்கிறது.

வளரும் சிறுவர்களின் எலும்பு பலம் பெற்று உறுதியுடன் வளர்ந்தால் தான் உடல் வளர்ச்சி ஏற்படும். சில சிறுவர்களின் உடல் வளர்ச்சியடையாமல், அதே நிலையில் நின்று விடுவதற்குக் காரணம் அவர்களுடைய வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி உயிர்ச்சத்து அவர்களுடைய ஆகாரத்தில் கிடைக்காத நிலைதான். எனவே, வளரும் குழந்தைகளுக்கு வைட்டமின் சி உயிர்ச்சத்து நிறைந்த ஆகாரத்தையே நிறையக் கொடுத்து வரவேண்டும். வைட்டமின் சி உயிர்ச்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளித்து அதோடு அதை வளரச் செய்யவும் பயன்படுகிறது. எனவே, எந்த ஒரு பழ வகையிலும் இல்லாத அளவு வைட்டமின் சி உயிர்ச்சத்து நிறைந்த கொய்யாப் பழத்தை வளரும் சிறுவர்களுக்கு அடிக்கடி கொடுத்து வரவேண்டும்.
மலச்சிக்கல் நீங்க
அடிக்கடி மலச்சிக்கலால் கஷ்டப் படுகிறவர்கள் நன்றாகப் பழுத்த, பெரிய கொய்யாப் பழத்தில் இரண்டை தேவையான போது எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் மறுநாள் சரளமாக மலமிறங்கும்.

கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சொறிசிரங்கு குணமாகும். உடலில் ஏற்பட்டுள்ள எந்த வகையான புண்களையும் ஆற்றும். இரத்த சோகை குணமாகும். பற்களுக்கு நல்ல பலத்தைத் தரும். கொய்யாப்பழத்தில் விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டாகையால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகளை இரத்தத்தில் கலந்தால் அதை உடனே கொன்று விடும்.
கொய்யாப்பழத்திற்கு பசியை மந்தப்படுத்தும் குணம் உண்டு. எனவே, ஆகாரத்திற்கு முன் கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவது கூடாது. கொய்யாப் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தி உண்டாகும். அரோகரத்தை உண்டு பண்ணும், பித்தம் உபரியாக சிலருக்கு பித்த கிறுகிறுப்பு ஏற்படுவதும் உண்டு.
கொய்யாப்பழ ஜாம்
நன்றாகப் பழுத்த பெரிய கொய்யாப் பழத்தில் ஆறு வாங்கி வந்து, அதைக் கழுவிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 400 கிராம் சர்க்கரையைப் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீரை அதில் விட்டுக் காய்ச்சினால் அது பாகுபதத்திற்கு வரும். அந்த சமயம் நறுக்கி வைத்திருக்கும் கொய்யாப் பழத் துண்டு களை அதில் போட்டு நன்றாகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பழம் வெந்து வரும் சமயம் 200 கிராம் சுத்தமான தேனைவிட்டு ஐந்து ஏலக்காயை நைத்துப் போட்டுக் கிளறி இறக்கி வைத்து இளம் சூடாக இருக்கும் போது மத்தைக் கொண்டு நன்றாகக் கடைந்து, சுத்தமான வாயகன்ற சீசா அல்லது மங்குச் சாடியில் போட்டு நன்றாக மூடிவைத்துக் கொண்டு இட்லி, தோசை, ஆப்பம் ரொட்டி இவைகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நல்ல ருசியுடனும், பதினைந்து தினங்கள் வரை கெடாமலும் இருக்கும்.




0 Comments