மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா...?

மனித இனம் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வான மாதவிடாயை அருவருப்புடனும் புறக்கணிப்புடனும்தான் அணுகுகிறோம். பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதுகூடக் கிடையாது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதற்கான வழிகளும் இல்லை.
பெரும்பாலான சிறுமிகளும் பெண்களும் பழந்துணியைத்தான் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்துகிறார்கள். சானிட்டரி நாப்கின், டாம்பூன், மாதவிடாய்க் குப்பி போன்றவை பெருவாரியான பெண்களைச் சென்றடையவில்லை. மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வழியில்லாததால் பெரும்பாலான பெண்கள் பள்ளியைவிட்டு நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மாதவிடாய் நாட்களின் சுத்தம் குறித்த விழிப்புணர்வோடு மாதவிடாய் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வை நீக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதுதான் ‘உலக மாதவிடாய் சுகாதார நாள்’.
பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெறும் என்பதால் ஆண்டுதோறும் மே 28 அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘2030-க்குள் மாதவிடாயை வாழ்க்கையின் இயல்பான நிகழ்வாக்குவோம்’ என்பதுதான் இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
மாதவிடாய் குறித்த உண்மைகளைவிடக் கற்பிதங்களே மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றன. அதனால்தான் பெண்கள்கூட அந்தக் கற்பிதங்களை விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறார்கள். மாதவிடாய் குறித்த கற்பிதங்களையும் உண்மைகளையும் பிரித்து அறிவோம்.
கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் வெளியேறும் ரத்தம் அசுத்தமானது.
உண்மை : பலரும் தவறாகப் புரிந்துவைத்திருக்கும் கற்பிதம் இது. மாதவிடாய் என்பது பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தோடு தொடர்புடையது. மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தம், நம்
உடல் முழுவதும் பாயும் ரத்தத்தைப் போன்றதே. இதன் நிறம் வெளிர் சிவப்பு நிறத்தில் தொடங்கி அடர் பழுப்பு நிறம் வரை நபரைப் பொறுத்து மாறுபடும். மாதவிடாயின் தொடக்கத்திலும் முடிவிலும் சிலருக்கு அடர் பழுப்பு அல்லது கருநிறத்தில் ரத்தம் வெளியேறும். மாதவிடாயின் போது ரத்தம் மட்டுமல்லாமல் கருப்பைச் சுவரில்
ஒட்டியுள்ள திசுக்களும் வெளியேறும்.
கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் தலைக்குக் குளிக்கக் கூடாது அல்லது அந்த மூன்று நாட்களும் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும்.
உண்மை: இரண்டுமே கட்டாயம் அல்ல. மாதவிடாயை முன்னிட்டு நம் வழக்கமான செயல்பாடுகளை மாற்ற வேண்டிய அவசிய
மில்லை. வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மாதவிடாய் நாட்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் தயிர், வாழைக்காய், உருளைக் கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. இவை மாதவிடாய் உதிரப்போக்கைப் பாதிக்கும்.
உண்மை: இதற்கும் அறிவியல்பூர்வமான சான்றுகள் இல்லை. மாதவிடாய் நாட்களில் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதில்
தடையில்லை.
கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் தனிமைப்படுத்திக்கொள்ள
வேண்டும்.
உண்மை: இதற்கும் அறிவியல்பூர்வமான சான்று கிடையாது. மாதவிடாய் நாட்களில் சிலர் அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்றவற்றால் சோர்வடைந்துவிடுவார்கள். அப்போது வழக்கமான
வேலைகளைச் செய்ய முடியாது என்பதால் அதிலிருந்து விலக்கு அளிக்க தனிமைப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த நடைமுறை வந்திருக்கக் கூடும் என்று சொல்லப்பட்டாலும், மாதவிடாயை ‘தீட்டு’ என்று சொல்லி ஒதுக்கிவைக்கவே இந்த ஏற்பாடு. அதனால் மாதவிடாய் நாட்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.
கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் ஊறுகாய், உப்பு போன்ற உணவுப் பண்டங்களைத் தொடக் கூடாது.
உண்மை: மாதவிடாய் நாட்களில் ஊறுகாயையும் உணவுப் பொருட்களையும் தொட்டால் அவை கெட்டுவிடும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையல்ல. அது மூடநம்பிக்கை.
கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
உண்மை: இது தவறு. மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்வதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. நடைபயிற்சியைக்கூடக் கைவிட
வேண்டியதில்லை. சில ஆசனங்கள் மாதவிடாய் நாட்களின் வயிற்று வலியை மட்டுப்படுத்த உதவும்.
கற்பிதம்: மாதவிடாய் வரவில்லை என்றால் கருவுற்றிருப்பதாக
அர்த்தம்.
உண்மை: இது தவறு. மாதவிடாய் வராமல் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், முறையற்ற உணவுப் பழக்கம், மனச் சோர்வு,
வேறு ஏதேனும் நோய் போன்றவற்றால்கூட மாதவிடாய் தள்ளிப் போகலாம். முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல்
கருவுற்றிருப்பதாக நாமாகவே முடிவெடுப்பது தவறு.



0 Comments